Friday 7 December 2012

அஜித் நடிகனா? மனிதனா?

இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற செல்வாக்கா?  உண்மை  எது என்று பார்க்கலாம்.

அஜித்தின் ஜனா என்கிற படம் ரிலீசான ஏப்ரல் 17, 2004, விஜய்யின் கில்லி ரிலீசான ஏப்ரல்14, 2004ம் நாளில் இருந்து ஆரம்பிப்போம். வில்லன் என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு கார் ரேஸ் மோகத்தில், அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சினிமாவை கொஞ்ச காலம் மறந்து இருந்தார் அஜித். ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும் தன் கார் ரேஸ் செலவுக்காகவும் சரியா கதையை தேர்ந்தெடுக்காமல், ‘ஆஞ்சனேயா’, ‘ஜனா’ என்று வரிசையாக சறுக்க ஆரம்பித்தார். வில்லன் படம் கொடுத்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் வசீகரா, பகவதி என்று மிகவும் சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை’ என்று ஒரு ஹிட் கொடுத்தார். சொல்லப்போனால் அவர் தந்தை, விஜய்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், தொடர்ந்து 4 படங்கள் 100நாட்களை கடந்து ஓடின என்று (ப்ரண்ட்ஸ் - 175 நாள், குஷி - 150 நாள், ப்ரியமானவளே - 125 நாள், பத்ரி - 100 நாள்).. அதற்குப் பின் தான் விஜய் சறுக்க ஆரம்பித்தார் வசீகரா, தமிழன், புதிய கீதை என்று.. கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் அவருக்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்தது திருமலை வெற்றி. திருமலை ரிலீஸ் ஆன அதே நாளில் வந்தது தான் ஆஞ்சநேயா.. ‘வில்லன்’ பட வெற்றியை அஜித்துக்கு தக்க வைத்துக்கொள்ளத்தெரியவில்லை. அப்போது அவர் பேட்டிகளும் மிகவும் ‘ரா’வாக இருக்கும். ’நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ‘எனக்கு சினிமாவ விட ரேஸ் தான் முக்கியம்’ என்று மனதில் பட்டதை எல்லாம் சொல்லி செமத்தியாக தன் இமேஜை கெடுத்துக்கொண்டார். இது நடந்தது 2003 தீபாவளியில்.

பின் 2004 சித்திரையில் தான் அந்த மாபெரும் வெற்றியும் படு மோசமானா தோல்வியும் நடந்தன. விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு ஜனா. ”ஜனா - the power machine னு பேர் வச்சதுக்கு பதிலா, ஜனா - the xerox machineனு வச்சிருக்கலாம்” என்று ஒரு பத்திரிகை ஓபனாகவே அசிங்கப்படுத்தியது. எல்லா சேனல் பத்திரிகைகளில் விஜய் பேட்டி, கில்லி டீம் பேட்டி என்று கலைகட்ட ஆரம்பித்தது. அஜித்தை சீண்டுவாரில்லை. அதே வருடத்தில் விஜய்க்கு உதயா என்றொரு ஃப்ளாப் வந்தாலும், கில்லியின் வெற்றி அதை மறைத்துவிட்டது. வருட கடைசியில் ‘மதுர’ படம் வந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அஜித்துக்கு அந்த வருட தீபாவளிக்கு வந்த ‘அட்டகாசம்’ ரசிகர்களை கூட சற்று ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.


இந்த நேரத்தில் தான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் என்ன நடித்தாலும் படம் ஹிட் என்கிற பெயர் வந்தது. 2005ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 3 படங்களும் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி) வெற்றி பெற்றன. சச்சின் சுமாரான வெற்றி தான். ஏன்னா அது சந்திரமுகியோடு போட்டி போட்டது. அஜித் நடித்து இந்த வருடம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வந்த “ஜீ” அட்டர் ஃப்ளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அஜித்துக்கு ஒரு படம் கூட ஹிட் இல்லை. விஜய்க்கு கிட்டத்தட்ட அனைத்துப்படங்களும் ஹிட். அடுத்த ரஜினி, வசூல் மன்னன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்துக்கு எப்பவுமே இருக்கும் “ஓப்பனிங் கிங்” என்கிற பட்டம் கூட ஆட்டம் காண ஆரம்பித்தது.

2006ல் இருவரும் தைப்பொங்களில் பரமசிவன், ஆதி என்று மோதினார்கள். இரண்டு படங்களுமே தோல்வி என்றாலும், ஆதியை விட பரமசிவன் நன்றாக ஓடியது. 2006ல் ஆதியே சறுக்கியதால் விஜய் அந்த வருடம் அடுத்து படம் நடிக்காமல் காத்திருந்தார். அஜித்துக்கு இதே வருடத்தில் வந்த திருப்பதி ஏ.வி.எம். என்கிற பேனர் தயாரித்த காரணத்தால் 100நாட்கள் ஓட்டப்பட்டது. வருமா வராதா என்று காக்கவைத்த ‘வரலாறு’ தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது. தான் ஒரு அஜித் ரசிகன் என்று கூறவே வெட்கப்பட்டவர்கள் இப்போது தான் கொஞ்சமாக வெளியே தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அஜித் சறுக்கும் போது கே.எஸ். ரவிக்குமார் தான் வெற்றி கொடுத்து காப்பாற்றினார்.

ஆனால் அஜித்தால் இந்த வெற்றியையும் தக்க வைக்க முடியவில்லை. 2007 தைப்பொங்கலில் அஜித் ஆழ்வாராக வந்து, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டார். விஜய் போக்கிரியாக வந்து ரெக்கார்ட் பிரேக் ஹிட் கொடுத்தார்.

இந்த சூழலில் தான் சூர்யா வரிசையாக கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் என்று வித்தியாசமான கதைகளில் நடித்து ’விஜய்க்கு நான் தான் சரியான போட்டி’ என்று வேகமாக முன்னேறினார். அஜித்தை அவர் ரசிகர்களைத்தவிர எல்லாரும் மறந்து விட்டார்கள். விஜய் மேலும் “ஒரே மாதிரி நடிக்கிறார்” என்கிற குற்றச்சாட்டும் வலுக்க ஆரம்பித்தது. 2007ல் பொங்களுக்கு வந்த வேல் என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அந்த வருடம் முழுக்க தாங்குவது போன்ற ஹிட்டை கொடுத்தார் சூர்யா. விஜய் தன் நடிப்புத்திறமையை (!!!!) காட்ட அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தார். விஜய்யின் “என்ன நடித்தாலும் ஓடும்” என்கிற பிம்பம் இந்த இடத்தில் தான் உடைய ஆரம்பித்தது.

அஜித் வருடத்தின் முடிவில் பில்லா என்னும் பிளாக்பஸ்டர் கொடுத்து தப்பித்துவிட்டார். ஆனால் விஜய் அழகிய தமிழ் மகன் என்கிற ஒரே படத்தின் மூலம் எஸ்.எம்.எஸ் ஜோக் வரை வம்புக்கு இழுக்கப்பட்டார். 

2008, 2009, 2010ல் வரிசையாக குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் அடுத்தடுத்து ஃப்ளாப்களை கொடுத்து, ஒரு காலத்தில் அஜித் ரசிகர்கள் தங்களை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள எப்படி கூச்சப்பட்டார்களோ, கிண்டலுக்கு பயந்தார்களோ அதே நிலை இப்போது விஜய்க்கு வந்துவிட்டது. அதுவும் எந்த ஒரு நடிகனும் தன்னுடைய 50வது படத்தை சுறா மாதிரி கொடுக்க மாட்டான். அஜித் வழக்கம் போல பில்லா வெற்றியை தக்க வைக்க முடியாமல் ஏகன், அசல் என்று ஃப்ளாப் கொடுத்தாலும், அவருக்கு என்று இருக்கும் கூட்டம் தைரியமாகவே இருந்தது. ஏன்னா, விஜய்யும் இப்போ ஃப்ளாப் லிஸ்டில் தானே இருக்கிறார்.


இரு முக்கிய ஹீரோக்கள் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற இடம் ஒருவருக்கு போய்த்தானே ஆக வேண்டும். அது இப்போது இருந்தது சூர்யா கையில். விஜய்க்கு எப்படி 2004, 2005 உச்சத்தில் இருந்ததோ சூர்யாவுக்கு 2008ல் இருந்து 2010 வரை அதே உச்சம் இருந்தது. விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்களும் அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்களும் பெரும்பாலும் போக மாட்டார்கள். ஆனால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் சூர்யா படத்துக்கு போனார்கள். சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் கம்மி என்றாலும் அவருக்கு, குடும்ப ரசிகர்கள் நிறைய இருந்தனர். குடும்பம் குடும்பமா அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தனர். அவரும் வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என்று பாக்ஸ் ஆபிஸை சிதறடித்துக்கொண்டிருந்தார். 

ஆனாலும் சூர்யாவுக்கும் அந்த “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற நீர்க்குமிழ் உடைய ஆரமபித்தது. அவரே அதற்கு காரணம். எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் சுயபுகழ்ச்சி என்று வழமையான ஒரு நடிகன் தான் தானும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். ”சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது”, என்று மக்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கம் படத்துக்குப்பிறகு அவர் 2001 தீபாவளிக்கு நடித்த ஏழாம் அறிவு எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சரி, இப்போது சூர்யாவிடமும் “என்ன நடிச்சாலும் ஹிட்” பட்டம் இல்லை. அஜித்தும் ஃப்ளாப் கொடுத்துவிட்டார். விஜய், காவலன் என்று ஒரு சுமாரான வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், வேலாயுதம் மறுபடியும் பழைய மாதிரி எஸ்.எம்.எஸ் ஜோக்குகளுக்கு அவரை ஹீரோவாக்கியது. அந்தப்பட்டம் அடுத்த லெவலில் இருக்கும் விக்ரமுக்கோ, சிம்புவுக்கோ தனுஷுக்கோ போகாமல் யாருமே எதிர்பாரா வண்ணம் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு சென்றது.

கார்த்தி நடித்திருப்பது இது வரை ஆறே ஆறு படம் தான். ஆனாலும் தன்னுடைய மூன்றாவது படத்தில் இருந்தே அவர் என்ன நடித்தாலும் ஓடும் என்கிற பிம்பம் வர ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கும் அவரின் அசால்ட்டான அலட்டல் இல்லாத நடிப்பு மிகவும் பிடித்துப்போய் விட்டது. 2011ல் அவர் நடித்த சிறுத்தை அனைவரையும் கவர்ந்து அவரையும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்தது. 

கிட்டத்தட்ட தன் அண்ணன் செய்த அதே தவறை தம்பி கார்த்தியும் செய்ய ஆரம்பித்தார். எல்லா மேடைகளிலும் தோன்றி “என்ன மாமா சௌக்கியமா?” என்று நியூஸ் வாசிக்கும் பெண் “இன்றைய முக்கியச்செய்திகள்” என்று சொல்வதை போல் திரும்ப திரும்ப சொல்லி வந்தார். பேச்சிலும் கொஞ்சம் அலட்டல் தெரிய ஆரம்பித்தது. முன்னணியில் இருக்கும் நான்கு நடிகர்களுக்கும் (அஜித், விஜய், சூர்யா, கார்த்தி) 2011 ஓரளவு நல்ல வருடமாகவே இருந்தது. கார்த்தி வருட ஆரம்பத்தில் சிறுத்தை நடித்திருந்தார். ஆனல் வருடத்தின் பின் பகுதியில் வந்த மற்ற மூவரின் படங்கள் சிறுத்தையின் ஆக்ரோஷத்தை குறைத்தன. அதுவும் அஜித்தின் மங்காத்தா, எந்திரனுக்கு அடுத்தபடியாக வசூலில் சாதனை புரிந்தது.


விஜய், சூர்யா, கார்த்தி என்று அனைவரும் மறக்கடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் “தல”, “அஜித்” என்றே எல்லா பக்கமும் பேச்சுக்கள் வந்தன. மங்காத்தாவில் அஜித்தின் இமேஜ் பார்க்காத நடிப்பும், அவரின் இயல்பான உண்யான சுபாவமும் பலருக்கும் பிடித்திருந்தது. அஜித் என்கிற நடிகனை விட பலரும் அஜித் என்கிற மனிதனை ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக் தான். பலரும் அஜித்தைப் பற்றி அதிரிபுதிரியாக தங்களுக்குத்தெரிந்த உண்மைகளை பேச ஆரம்பித்தார்கள். அது ஒவ்வொரும் share செய்து share செய்து பரவலாக அனைவருக்கும் அவரின் குணம் புரிந்தது. இது போக கலைஞரின் பாராட்டு விழாவில் தைரியமாக “உங்க functionக்கு வரச்சொல்லி எங்கள மிரட்டுறாங்க ஐயா” என்று அவர் பேசியது, இத்தனை நாள் அவர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்த பத்திரிகைகளுக்கு கூட அவரை பாராட்ட ஒரு காரணமாய் அமைந்தன. இது அவருக்கும் பொது மக்களிடம் இருந்து கூட மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. 

ரசிகர் மன்றத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது, என்று அவர் செய்யும் ஒவ்வொன்றும் பொது மக்களிடம் அவரை உண்மையாக கொண்டு சேர்த்தன. ஒரு காலத்தில் திமிராக இருக்கிறார் என்று அவரை வெறுத்தவர்கள், இன்று அதே திமிருக்காக அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அஜித் என்று பேசினால் அவரைப் பிடிக்காதவர்கள் கூட அவரின் நல்ல பண்புகளைப் பற்றி பேசும் சூழல் தான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.


இது வரை அவரின் கேரியரில் பார்த்தால், “என்ன நடித்தாலும் ஹிட்டு” என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் முன்னணி நடிகர் லிஸ்டில் இருந்து கொண்டே இருப்பார். அவரின் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனாலும், அவரின் அடுத்த படத்துக்கு முந்தைய படத்தை விட அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது அஜித் என்கிற நடிகனுக்காக இல்லை. அஜித் என்னும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத ஒரு உண்மையான மனிதனுக்காக. பில்லா 2 ட்ரைலர் வெளியிட்ட ஒரே நாளில் 3லட்சம் ஹிட்ஸ் வந்துள்ளது. எந்திரனுக்கு கூட இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை படம் ஓடாமல் போனாலும் யாரும் முன்பு மாதிரி அஜித்தை குறை சொல்லவோ கிண்டல் செய்யவோ மாட்டார்கள். அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. அஜித், படமே நடிக்காமல் போனாலும் அவர் மீது மக்களுக்கு இதே அபிப்பிராயம் தொடரும். அவர் நடிகன் என்கிற படியை தாண்டி பக்குவமான மனிதன் என்கிற இடத்தில் அனைவரும் ஆதர்சமாக பார்க்கும் ஒரு இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் மற்ற நடிகர்களுக்கு இருந்தது போல், இவருக்கு இப்போது வந்திருக்கும் பாப்புலாரிட்டி “நீர்க்குமிழி” இல்லை. அவரின் எதிர்நீச்சலுக்கு கிடைத்த வைர கிரீடம். அதை யாராலும் உடைக்கவும் முடியாது, அழுக்குப்படுத்தவும் முடியாது.. அஜித் ஆரம்பித்தில் இருந்து இப்போது வரை தன் குணத்தையோ செயல்பாடுகளையோ மாற்றிக்கொண்டதே இல்லை. ஆனால் மக்களை அவர் மாற்றிவிட்டார். தன்னுடைய வெளிப்படையான பேச்சிற்காக கிண்டலும் அசிங்கமும் செய்த மக்களே, இன்று அதே வெளிப்படையான பேச்சுக்காவே அவரை ரசிப்பது, நிஜமாகவே அஜித் என்ற மனிதனுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. ஒரு படம் வெற்றி அடைவதை விட, ஒரு மனிதன் என்கிற அளவில் அஜித் பெற்றிருக்கும் இந்த வெற்றி இதுவரை சம காலத்தில் எந்த நடிகருக்கும் கிடைக்காதது. அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.

 நீ எப்பவும் டாப் தான் ‘தல’.... 

நன்றி:நண்பர் ராம்குமார்க்கு நன்றி, அவரது பதிவை பார்க்க   சிவகாசிக்காரன்