Saturday, 24 November 2012

குபேரர் அல்ல சிரிக்கும் புத்தர் பூடேய்.......பல வியாபார ஸ்தலங்களிலும், வீடுகளிலும் வடக்கு திசையில் குபேரர் அமர்ந்திருந்தால் அதிருஷடம் வீடு தேடி வரும் என்ற நம்பிக்கை இருக்கும் பார்த்தாலே ஆனந்தம் பொங்கும் சந்தோஷமான செழிப்பான தோற்றத்துடன் இருக்கும் பொம்மைகள்  உண்மையான குபேரர் அல்ல உண்மையில் அது  சீனாவின் சிரிக்கும் புத்தர்  என்ற பெயரில் தொந்தியும் தொப்பையுமாக சிரித்த முகத்துடன் ஒரு சிலை கிடைக்கும் இந்தப் பொம்மைச் சிலை பலவிதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒன்றில் பணம் மடியில் கொட்டும் ஒன்றில் தன் இரு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டிருப்பது போல இருக்கும். இதுவும் குபேரன் தான் என்று சொல்கிறார்கள். உண்மையில் குபேரர் வேறு சிரிக்கும் புத்தர் பூடேய் வேறு.

 சிரிக்கும் புத்தர் பூடேய் வரலாறு:

           ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிரிக்கும் புத்தரைப் போலவே ஒருவர் வாழ்ந்திருந்தார் என்பது  சீனத்தில் நிலவும் நம்பிக்கை.அவர் பெயர் பூடேய். அவர் லியாங் முடியாட்சி காலத்தில் வாழ்ந்த ஒரு ச்சான் பிக்கு.மிகுந்த கருணையும் தயாள குணமும் கொண்ட இவரை முக்கிய ஏழு கடவுளர்களுள் ஒருவராக தாவோ மற்றும் ஜப்பானிய ஷிண்ட்டோ மதங்கள் கருதுகின்றன.

சிரிக்கும் புத்தரின் தொப்பையைத் தடவினால் பெரிய அதிருஷ்டமும்செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முடித்திருத்தகம் மற்றும் உணவகங்களில் இந்த புத்தர் சிலையை வைத்திருந்தால் அதிருஷ்டம் பெருகும் என்பதும் பரவலானதொரு நம்பிக்கை.இதனாலேயே உணவகம்,விடுதிகள் போன்ற இடங்களில் நுழைவாயிலிலேயே சிரிக்கும் புத்தரை நாம் காணலாம்.

வணிகப் பயணிகள் மற்றும் பிக்குகள் பௌத்ததை கிழக்கில் ஜப்பான் கொரியாபோன்ற நாடுகளை நோக்கியும் வடக்கில் ஆஃப்கானிஸ்தான் திபெத் நோக்கியும்தெற்கில் இந்தோனேசியா மற்றும் ஸ்ரீலங்கா நோக்கியும் நூற்றாண்டுகளாகக் கொண்டு சென்று பரப்பியிருக்கிறார்கள். பல்வேறு கலாசாரங்கள் பௌத்ததைஉள்வாங்கியதால் பௌத்தத்தில் ஏற்பட்ட சின்னச் சின்ன மாற்றங்கள் இயல்பாய்நிகழ்ந்தன.

10ஆம் நூற்றாண்டில்தான் சீனத்து பௌத்ததில் மகிழ்ச்சியின் கூறுகளையெல்லாம் சேர்த்து உள்வாங்கி, ஒரு கையில் மணிமாலையும் மற்றொரு கையில் பொற்காசுகள் நிறைக்கப்பட்ட பையுமாக சிரிக்கும் புத்தர் என்ற கருத்தாக்கம் உருவானது. சுற்றிலும் இருந்த குழந்தைகள் பல தலைமுறைகள் ஒரே கூரையின் கீழ் வாழும் சீனத்து பெரிய குடும்பத்தைக் குறித்தது.

சிரிக்கும் புத்தரை பூடேய் என்று அழைக்கிறார்கள் கிழக்காசியர்கள். ஜப்பானிலோ இவரை ஹோடேய் என்பார்கள். சிரிக்கும் புத்தர் என்பதுதான் பொதுவாக வழக்கிலிருக்கும் பெயர். மி-லோ-பூ என்றறியப்படும் பூடேய் குறித்து ஒரு கவிதை சீனத்திலுண்டு.

மி-லோ,
உண்மை மி-லோ
எண்ணற்ற முறை
மீண்டும் மீண்டும் 
மனிதகுலத்தில் அவதரித்தும் 
அடையாளம் காண்பதில்லை
சமகால மனிதன்

வானிலை மாற்றங்கள் குறித்த பூடேய்யின் முன்னுரைப்புகள் தான் அவரைப் பிரபலமாக்கியது. மறுசிந்தனையற்று பின்பற்றக் கூடிய அளவில் மக்கள் அவரை நம்பினர். குறிப்பாலோ சொற்களாலோ மக்களுக்கு வானிலை மாற்றத்தை எடுத்துரைத்துக் காத்தார். மழை வரும் என்றுரைக்க அவர் ஈரக் காலணி அணிந்தார். மரப் பாதணி அணிந்திருந்தாரேயானால் வெயிலை எதிர்பார்த்தனர். அதேபோல ஊரின் பாலத்தின் மீது குத்த வைத்து உட்கார்ந்து அவர் உறங்கினாலும் வெயில் நிச்சயம். 

பூடேய் தானே வடித்த பல சிறந்த கவிதைகளை விட்டுச் சென்றிருப்பதாக சீனர்கள் நம்புகிறார்கள். தியானத்தின் மூலம் மனம் மேம்படுவதைச் சொல்லும் ஒரு கவிதை இதோ-

பத்தாயிரம் தர்மங்கள்
எத்தனை வேறுபாடுகள்?
மனம்?
அதை எப்படி வேறுபடுத்த?
மத நூல்களைத் தேடி என்ன பயன்?
மன அரசன் தன்னியல்புடன்
அனைத்து அறிவடுக்குகளையும் துறந்து
கற்காதிருக்கக்
கற்பவனே அறிஞன்

ஊர் ஊராய்ச் சுற்றித் திரியும் வாழ்க்கையைச் சொல்லும் இன்னொரு கவிதை -
ஒரு திருவோட்டிலிருந்து
உண்கிறேன் ஓராயிரம்
குடும்பத்துச் சோற்றை
திரிகிறேன் தனியே 
பத்தாயிரம் மைல்கள்
என் கண்களில் 
கருணையை
காண்போர் அரிது
வெண்மேகங்களிடையே
தேடுகிறேன் ஞானத்தை

இன்றும் செக்கியாங் மாநிலத்து இயூ-லிங் ஆலயத்திற்குள் பூடேய்யின் பழம்ஓவியத்தைக் காணலாம். அது தான் அவரது இறப்பிடம்.

இன்றைய காலகட்டத்தில் சிரிக்கும் புத்தர் உருவமானது மகிழ்ச்சியையும்நல்வாழ்வையும் நினைவு படுத்தி வாழ்க்கையைச் சுவைக்கச் சொல்லும் குறியீடாகவே ஆகிவிட்டது. சமீப சில ஆண்டுகளில், பங்ஷ்வேய் எனும் சீன வாஸ்து சாஸ்திரத்தைப் போலவே இவரும் சீன எல்லைகளைத் தாண்டி உலகெங்கிலும் பிரபலமாகி வருகிறார். சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் வளமையும்மகிழ்ச்சியும் செல்வமும் வீட்டில் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. சிரிக்கும் புத்தர் என்ற பெயருக்கும் உருவத்திற்கும் அவரது உடைகளுக்கும்பின்னால் ஒரு செறிவான வரலாறு உண்டு. தாவோ மதப் பின்னணியையும் மறுக்கமுடியாது என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் முன்வைப்பு.

வாழ்க்கை ஒரு விளையாட்டு. படைத்தவனின் அருளைத் துணை கொண்டு நாம் நமது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்தாலும் வாழ்க்கையை சிரித்துக் குதூகலித்துக் கடக்க வேண்டும் என்பதைச் சொல்வதைப் போல இவர் சிரித்துக் கொண்டே அமர்ந்திருக்கிறார். அனைத்தையும் மன்னித்து ஏற்கும் கருணை உள்ளம் கொண்டவர் பூடேய்.

பார்ப்பதற்கு மொட்டைத் தலை, சுருக்கங்கள் விழுந்த நெற்றி மற்றும்பொக்கைவாய்ச் சிரிப்புடன் இருப்பதால் மட்டுமே அவருக்கு சிரிக்கும் புத்தர்என்ற பெயர் வந்துவிடவில்லை. அங்கியால் மூடப் படாத உருண்டையான தொப்பையும் குண்டான உருவமும் குறிப்பது திருப்தியையும் நிறைவையும்.இவர் தன் சிரிப்பால் உலகுக்குச் சொல்லும் செய்தி மகிழ்ச்சி. இவர் புத்தரின் பலஅவதாரங்களில் ஒன்றான போதிசத்வ மைத்ரேயா என்பதே சீனர்களின் நம்பிக்கை. போதிசத்வ மைத்ரேயா என்றாலே எதிர்கால புத்தர் என்றொரு பொருள் உண்டு. அதிருஷ்டத்தைக் கொணரும் என்று நம்பப்படும் இவரது உருவம் முற்காலத்தில் பௌத்த மடாலயங்களில் காணப்பட்டன.இப்போதெல்லாம் சீனர்கள் மட்டுமின்றி எல்லா இனத்தவருக்கும் இவரது உருவம் விருப்பமாகி விட்டிருக்கிறது.

மைத்ரேயா என்ற பெயர் மைத்ரி என்ற வடமொழிச் சொல்லிலிருந்து உதித்தது.அன்பு, கருணை, பெருந்தன்மை, நட்பு, தோழமை, நல்லெண்ணம் ஆகிய பலவற்றைக் குறிக்கும் சொல் மைத்ரி. மைத்ரேய புத்தரை மீ-லே-பூ என்றும் சீனர்கள் சொல்வார்கள்.

சிரிக்கும் புத்தர் கையில் ஒரு துணிப்பையைத் தூக்கிக் கொண்டிப்பதைக் காணலாம். அதில் கொடுத்துத் தீராத செல்வம் இருக்கிறது. அரிய நவமணிகள், உணவு, அரிய தின்பண்டங்கள், மிட்டாய்கள் எல்லாமே குழந்தைகளுக்கானவை.நம்மிடமிருந்து எல்லாத் துயரங்களையும் வலிகளையும் தான் எடுத்துக் கொண்டு நமது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார் சிரிக்கும் புத்தர். குறிப்பாக, ஏழை எளியோரை ஆதரித்து ரட்சிக்கும் குணமுடையவர் இவர். புத்தரிடமிருக்கும் அந்தத் துணிப்பையில் உலகாயாத பருண்மைகள் மட்டுமின்றி, குழந்தைச் செல்வமும் இருக்கிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் ஒருவகைச் செல்வம் குழந்தைகள். சிரிக்கும் புத்தருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம். அவர்களது அனைத்து ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவார். சிரிக்கும் புத்தரின் சில சிலைகளில் அவரைச் சுற்றியும் அவர் மேனியின் மீதும் சிறு குழந்தைகள் துள்ளி விளையாடுவதைப் போல அமைத்திருப்பார்கள். காலடியில் குழந்தைகள் இருப்பதைப் போன்றும் சில சிலைகள் சித்தரிக்கப்பட்டிருக்கும்.வேறொரு வகை சிரிக்கும் புத்தரை வண்டியில் வைத்து சிறுவர்கள் இழுப்பதையும் காணலாம். இதில் புத்தர் தன் கையில் மாய விசிறியை வைத்திருப்பார். இந்த விசிறி எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியது. அது மட்டுமின்றி இந்த விசிறி, அனைத்து வளங்களும் கொண்டிருக்கும் சீனத்து மேட்டிமையைக் குறிக்கக் கூடியது. சிரிக்கும் புத்தர் கையில் திருவோடு ஏந்தியிருப்பதையும் காணலாம். இது இரந்து உண்ணும் துறவு நிலையைக் குறிக்கும்.

நவீன சீனத்தில் வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியின் அர்த்தங்கள் முற்றிலும் மாற்றம் கண்டுள்ளன. சீனத்தில் மட்டுமின்றி உலகநாடுகள் எல்லாவற்றிலுமே இதே நிலைதான். புத்தர் கையிலிருக்கும் திருவோட்டுக்கு இன்றைய சீனர்களிடையே அதிக கவனம் இல்லை. பொருளாதாயங்களிலிருந்து பற்றற்ற ஒரு நிலையை வலியுறுத்துவதை படிப்படியாக மறந்து மக்கள் வேறு பல அர்த்த அடுக்குகளை அவர் மீது ஏற்றியுள்ளனர். இன்றைய உலகம் மகிழ்ச்சியைக் கணிக்க செல்வத்தையும் பொருளையும் அளவுகோல்களாக்கி இருப்பதால் நவீன சிரிக்கும் புத்தர் செல்வத்தையும் வளமையையும் செழிப்பையும் அருளும் கடவுளாகக் கருதப்படுகிறார்.

மகிழ்ச்சி, செழுமை, நீண்ட ஆயுள் போன்றவற்றைக் குறிக்கும் பெரிய திறந்த அவரது தொப்பை முன்நீட்டிக் கொண்டிருக்கும். நிரந்தரச் சிரிப்பு அவர் முகத்தில் உறைந்திருக்கும். உற்சாகமாகச் சிரிக்கும் புத்தரான பூடேய்யின் இந்த உருவமே அவரைக் காணும் ஒருவருக்குள் புது உற்சாகமும் மகிழ்ச்சியும் வரும். பூடேய் என்றாலே துணிப்பை அல்லது தினீப்பிரியர் என்று பொருள்.

ச்சான் ஆலயங்களின் நுழைவாயிலிலும் முன்முற்றங்களிலும் காணப்படும்பூடேய் மஹாயான பௌத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவம். பௌத்தமடாலயங்களில் முன் கூடத்தில் இவரது திருவுருவச் சிலை இருக்கும்.பூடேய்யின் உருவம் பரவலாக விரும்பப்பட்டும் வழிபடப்பட்டும் வந்த போது தான் ஏற்கனவே பௌத்தத்தில் இருந்த போதிசத்வ மைத்ரேயர் எனும் கருத்தாக்கமும் நம்பிக்கையும் பூடேய்யின் மீது ஏற்றப் பட்டிருக்கிறது என்பதுவரலாற்றாய்வாளர்களின் கருத்து.

சீனத்தில் மிக அதிக பொறுமைசாலியை 'பெருவயிறுடையவன்'என்றழைப்பார்கள். இதுவும் கூட பூடேய்யின் தொந்தி வயிறு உருவாகக் காரணமாக இருக்கலாம். இந்த தெய்வம் மிகவும் பொறுமைசாலியாக அனைத்தையும் பொறுத்து அருள்பவர் என்பதை உருவகிக்க தொப்பையை ஒரு முக்கிய அடையாளமாக்கி இருக்கிறார்கள் என்றும் சிலர் கூறுவர்.

சீனத்தில் நிறைய வட்டாரங்களில் மைத்ரேய புத்தர் குழந்தைச் செல்வத்தைஅருளுபவராக அறியப்படுகிறார். அதுவும் ஆண்மகவுகளைக் கொடுத்துமகிழ்விப்பவராக சீனர்கள் நம்பி வணங்குகிறார்கள். இவரை வணங்கி இவரதுதொப்பையைத் தடவும் பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதுபரவலான நம்பிக்கை.

வீடுகளில், அறைகளில், அலுவலகங்களில், கடைகளில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தம் மேசையில் என்று, சிரிக்கும் புத்தர் சிலையை வைத்துக் கொள்வது சமீப காலங்களில் அதிகமும் காணக் கூடியதாகவே இருக்கின்றது. சொல்லப் போனால் உட்புற அலங்கரிப்பாளர்களே இச்சிலையைப் பரிந்துரைக்கின்றனர். இதன் காரணமாக உலகளவில் சிரிக்கும் புத்தர் சிலைகளில் பல்வேறு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையும் கூடியபடியே இருக்கின்றது. நுழைவாயிலை நோக்கி வைப்பதே வழக்கம்.மரம், உலோகம், கல் போன்ற பலவற்றிலும் சிலைகள் செய்யப் பட்டபோதிலும் கற்சிலைகளே ஆக அதிகம் விரும்பப்படுகின்றன.

உண்மையில் இவர்தான் குபேரர்.


                                                                                                 குபேரனின் ஆலயங்கள்.... 

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் ஜம்பத்தாறு கிலோ மீட்டர் தொலைவில் சுருட்டப்பள்ளியில் உள்ள ஈஸ்வரன் ஆலயத்தில் குபேரனின் சன்னதி உள்ளது. கீவளூர், அட்சயலிங்கேஸ்வரர் ஆலயத்தில், சந்திரகுப்தன் என்ற ஏழைக்காக, குபேரன் நிறைய செல்வம் அளித்ததாக வரலாறு உள்ளது. சம்பந்தர், அப்பர் பாடிய திருத்தலம் இது. அம்பாள் ஸ்ரீசுந்தரகுசாம்பிகை, தாயார் சன்னதியில் குபேரன் உள்ளார். ஈரோட்டில் சங்கமேஸ்வரர் பவானி ஆலயத்திலும் குபேரன் வாசம் செய்கிறார். 

தாமரையும், குபேரனும்........ 

ஸ்ரீமகாலட்சுமிக்கும், குபேரனுக்கும் மிகவும் உகந்தவை தாமரை மலர்களே, எனவே, முடிந்தவர்கள் ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது, குபேர அஷ்டோத்திர சதநாமாவளி சொல்லும் போது, 108 தாமரை மலர்களையோ, இதழ்களையோ பயன்படுத்துவது மிகவும் நல்லது. தங்க மூலாம் பூசப்பட்ட வெள்ளியிலான, சின்னச் சின்ன தாமரை மலர்களையும், பூஜைக்குப் பயன்படுத்தி விட்டு, பின்பு எடுத்து வைத்து எப்போதும் பயன்படுத்திப் பலன் அடையலாம். 

குபேர பொம்மைகள் வைப்பது நல்லது...... 

இரண்டு கைகளையும் மேலே தூக்கி, தொப்பையுடன் உள்ள பொம்மைகளின் தலைமேல் காசுகள் வைத்து வடக்குப் பார்த்து வைப்பது நல்லது. 

குபேரன் படம்.......... 

மகாலட்சுமியுடன் சேர்ந்த ஸ்ரீலட்சுமி குபேரன் படத்தை வாங்கி வைத்துப் பூஜித்து பலன் அடையலாம்.ஸ்ரீகுபேர வாசல், ஸ்லோகத்தையும் படித்தால், செல்வம் கொட்டும். எனவே தூய பக்தியுடன், தெய்வ நம்பிக்கையுடன் பூஜித்தால், ஸ்ரீமகாலட்சுமியின் பேரருளும், குபேரனின் கருணையும் இணைந்து நம் இல்லங்களில் ஐஸ்வர்யம் கொட்டும்.


0 கருத்துக்கள்:

Post a Comment