Thursday 15 November 2012

மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பிக்கு வயது 11


மைக்ரோசாப்ட் மிகப் பெருமையாகத் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்ட வெளியீட்டு விழாவினைச் சென்ற அக்டோபர் 25ல் நடத்தியது. அன்றுதான், விண்டோஸ் எக்ஸ்பி தன் 11 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. 2001, அக்டோபர் 25ல், மைக்ரோசாப்ட் தன் மிகச் சிறந்த விண்டோஸ் எக்ஸ்பியை வெளியிட்டது. நாள் முழுவதும் நடந்த விண்டோஸ் 8 வெளியீட்டு விழா ஆரவாரத்தில், மைக்ரோசாப்ட் ஊழியர்கள் நிச்சயம் இதனை மறந்திருப்பார்கள். இன்னும் 18 மாதங்களில், மைக்ரோசாப்ட், எக்ஸ்பி சிஸ்டத்திற்குக் கட்டாய ஓய்வு தர இருக்கிறது. 



கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருந்து முற்றிலும் எக்ஸ்பி மறைந்துவிடுமா என்று கேட்டால், மறையாது என்று தான் சொல்ல வேண்டும். விண்டோஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தவர்களுக்கு, வாராது வந்த மாமணியாய், எக்ஸ்பி கிடைத்தது. பல பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, எளிய, பல திறன்களையும் வசதிகளையும் கொண்ட சிஸ்டமாக இருந்தது. சென்ற செப்டம்பர் மாதத்தில் வெப் மெட்ரிக்ஸ் என்னும் நிறுவனம் எடுத்த கணக்கின்படி, இன்னும் 45 சதவிகிதக் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டம், சென்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து, எக்ஸ்பியைக் காட்டிலும் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, எக்ஸ்பியின் பயன்பாடு குறையும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதற்கேற்றார்போல, 2011 ஜூன் மாதம் முதல், தன் வாடிக்கையாளர்களை, புதிய ஹார்ட்வேர் பயன்படுத்தும்படியும், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாற்றிக் கொள்ளும்படியும் அறிவிப்புகளைத் தந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை, எக்ஸ்பியில் இயங்கா வண்ணம் வடிவமைத்தது.



2014 ஏப்ரல் 8 முதல், மைக்ரோசாப்ட் எக்ஸ்பிக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போகிறது. மைக்ரோசாப்ட் மட்டுமின்றி, அப்ளிகேஷன் புரோகிராம்களை வடிவமைத்து வழங்கி வருபவர்களும், எக்ஸ்பியில் அவை இயங்குவதில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வினை அளிக்காமல் இயங்கப் போவதாக தெரிவித்துள்ளனர். அப்படியானால், இன்னும் எக்ஸ்பியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், தங்கள் சிஸ்டங்களை மாற்றிக் கொள்ளுமா? அல்லது ரிஸ்க் எடுத்துத் தொடர்ந்து பயன்படுத்துமா? இந்தக் கேள்விக்குப் பதிலை, 2014ல் தான் பெறமுடியும். ஆனால், எப்படியும் 10% முதல் 15% கம்ப்யூட்டர்களில் எக்ஸ்பி தொடர்ந்து இயங்கும் என்று ஆய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.


பல நிறுவனங்களிடம் இந்த மாறுதல் குறித்து என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள் எனக் கேட்ட போது, 60% பேர், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும், 26% பேர் விண்டோஸ் 8க்கு மாறிக் கொள்வோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். 14% பேர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்துடனேயே இயங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து மாற மாட்டோம் என்று சொல்பவர்கள், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பல நவீன வசதிகளை இழப்பார்கள் என்று பலர் கருதுகின்றனர். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் மிகப் பின்தங்கியே இருப்பார்கள் என்னும் கருத்து வலுப்பெற்று வருகிறது. பரவாயில்லை, எங்கள் பணிக்கு இது போதும் என்று உறுதியாகக் கூறுபவர்களும் இருக்கின்றனர். இந்த கருத்து மோதலின் முடிவு தெரிய 2014 ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, விண்டோஸ் எக்ஸ்பி, இதனைப் பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருக்கும்.
- நன்றி தினமலர்

0 கருத்துக்கள்:

Post a Comment